சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்


சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 11:41 PM GMT (Updated: 26 Jan 2022 11:41 PM GMT)

குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை,

மக்களாட்சியை ஆதாரமாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பு சாசனம், 26.1.1950 அன்று அமலுக்கு வந்தது. அந்த தினம், குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அங்கு குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 7.15 மணியில் இருந்தே விழா அழைப்பாளர்கள் வரத் தொடங்கினர்.

இந்த விழாவில் முக்கியஸ்தர்கள் அமர்வதற்காக சாலை ஓரத்தில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்ந்தனர்.

கவர்னர், முதல்-அமைச்சர் வருகை

காலை 7.52 மணிக்கு விழாப் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவர் வந்த காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். விழா பந்தலில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவியுடன் வருகை தந்தார். அவர், விமானப்படை போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அவரும் பார்வையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்றார். அதைத் தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.

கொடி ஏற்றினார்

பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல் (மெடிக்கல்) சபீது சையது, கடற்படை அதிகாரி (பொறுப்பு) கமோடர் எஸ்.ராகவ், தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி குரூப் கேப்டன் எம்.கே.ரமேஷ், கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர் ஆனந்த் பிரகாஷ் படோலா, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) தாமரைக்கண்ணன் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. நாட்டுப் பண் இசைக்கப்பட்டது. கவர்னர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி, முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் ‘சல்யூட்’ செய்தபடி நின்றனர்.

அணி வகுப்பு மரியாதை

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அணி வணக்க மேடையில் நின்றபடி, பல்வேறு படை அணியினர் மிடுக்குடன் வந்து செலுத்திய வணக்கத்தை ஏற்றுக் கொண்டார். முதலில் ராணுவப் படைப் பிரிவு, அடுத்ததாக கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர்.

கடற்படை ஊர்தியில் போர்க் கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணி வகுத்து கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணி வகுத்துச் சென்றனர்.

பதக்கங்கள்

அதன் பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் வழங்கினார். முதல்-அமைச்சருடன் பதக்கம் பெற்றோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. முதலில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மங்கள இசை ஊர்தி வந்தது. அதில், தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசை, அதற்கு ஏற்ப பரத நாட்டியக் குழுவினரின் நடனம் ஆகியவை இடம் பெற்றன.

அனுமதி மறுக்கப்பட்ட ஊர்தி

அடுத்ததாக, டெல்லி குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் இடம் பெற்ற வடிவமைப்புகள், 3 ஊர்திகளில் பிரித்து வைக்கப்பட்டு அந்த ஊர்திகள் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன. முதல் ஊர்தியில் சிப்பாய் புரட்சி நடந்த வேலூர் கோட்டை மற்றும் சுதந்திர போராளிகள் ராணி வேலு நாச்சியார், வீரப் பெண் குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள் மற்றும் அவர்கள் வழிபட்ட காளையார் கோவில் கோபுரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் வடிவமைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

குதிரையில் ஏறி கையில் வாள் பிடித்தபடி இருக்கும் ராணி வேலு நாச்சியார், வீரப் பெண் குயிலியின் சிலை, தூக்கு மேடையில் தூக்கு கயிறுக்கு அருகே தைரியத்துடன் நெஞ்சை நிமிர்த்தியது போல நிற்க வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் சிலை ஆகியவை தத்ரூபமாக காட்சி அளித்தன.

2-ம் அலங்கார ஊர்தியில், விடுதலைக்காக போராடிய மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில், வ.உ.சிதம்பரனார், சிறையில் செக்கிழுக்கும் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவர் செக்கில் மாட்டப்பட்டு இழுப்பதையும், அவர் பின்னால் ஆங்கிலேய போலீஸ் ஒருவர் சாட்டையால் அடிப்பதையும் சுழற்சி அசைவுடன் வடிவமைத்திருந்தது பாராட்டத் தக்கதாக இருந்தது.

3-வது ஊர்தியில், பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு.ஐயர், காயிதே மில்லத், ஜே.சி.குமரப்பா ஆகியோரின் புகழை வெளிப்படுத்தும் சிலை வடிவமைப்புகள், அனைவரையும் கவர்ந்தன.

22 நிமிட விழா

அதைத் தொடர்ந்து நாட்டுப் பண் இசைக்கப்பட்டு விழா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய விழா நிகழ்ச்சிகள் 8.22 மணிக்கு நிறைவடைந்தன. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணங்களுக்காக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. விழா மேடை அருகே சானிடைசர், முககவசம் போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றும்படி அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் விழாவிற்கு வந்திருந்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. ஆகிய கட்சிகளில் இருந்து யாரும் கலந்துகொள்ளாமல் இந்த விழாவை புறக்கணித்தன.

Next Story