புதுவை மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசே ஏற்கும்
உக்ரைனில் இருந்து மீட்கப்படும் புதுவை மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
உக்ரைனில் இருந்து மீட்கப்படும் புதுவை மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
போலியோ சொட்டு மருந்து
புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம் நடந்தது. புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காலி பணியிடங்கள்
புதுச்சேரியில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 86 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு பல் மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
சுகாதார துறையில் உள்ள செவிலியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நிறைவு பெற்றுள்ளது. அவர்களுக்கு எழுத்துத் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
அரசே ஏற்கும்
அரசு துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் இந்த மாதம் முதல் வழங்கப்படும். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வருவதற்கு தேவையான முழு செலவையும் புதுச்சேரி அரசே ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
Related Tags :
Next Story