அரசியலுக்கு வர முடிவா? நடிகர் அஜித்குமார் விளக்கம்


அரசியலுக்கு வர முடிவா? நடிகர் அஜித்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 2 March 2022 2:47 AM IST (Updated: 2 March 2022 2:47 AM IST)
t-max-icont-min-icon

அரசியலுக்கு வருவதாக வெளியான தகவலுக்கு நடிகர் அஜித்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு பல வருடங்களாகவே நிலவி வருகிறது. ரசிகர்களும் அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே ரசிகர் மன்றத்தை அஜித்குமார் கலைத்தார்.

இரு வருடங்களுக்கு முன்பு அஜித்குமார் வெளியிட்ட அறிக்கையில் ‘’அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை என்னுடைய ரசிகர்கள் தங்கள் தனிப்பட்ட அரசியலுக்கு எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் அரசியல் நிகழ்வுகளில் எனது பெயரோ படமோ இடம்பெறுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

அரசியல் பிரவேசமா?

இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராவதாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. ஜெயலலிதாவும் அஜித்குமாரும் ஒன்றாக இருப்பது போன்ற பழைய புகைப்படமும் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரசியலுக்கு வருவதாக வெளியான தகவலை அஜித்குமார் சார்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. எனவே ஊடகத்தினர் இதுபோன்ற தவறான தகவல்களை உக்குவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Next Story