தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய 21 பேருக்கு விருதுகள் முதல்-அமைச்சர் வழங்கினார்


தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய 21 பேருக்கு விருதுகள் முதல்-அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 March 2022 4:38 AM IST (Updated: 16 March 2022 4:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய 21 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரிலான மாத இதழ் விருதை உயிர்மை மாத இதழ் பெற்றுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பு, மாத இதழ் என மொத்தம் 21 விருதுகளை இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.

தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் 2022-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது மறைந்த மு.மீனாட்சிசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அவரின் மனைவி வசந்தா அந்த விருதை பெற்றுக்கொண்டார். 2021-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது-நாஞ்சில் சம்பத்; பெருந்தலைவர் காமராசர் விருது - குமரிஅனந்தன்; மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்; பாவேந்தர் பாரதிதாசன் விருது - செந்தலை கவுதமன்;

பாரதி பாஸ்கர்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - ம.ராசேந்திரன்; கம்பர் விருது - பாரதி பாஸ்கர்; சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்; ஜி.யு.போப் விருது - அ.சு.பன்னீர் செல்வன்; உமறுப்புலவர் விருது - நா. மம்மது; இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன்; சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்; மறைமலையடிகளார் விருது - சுகி.சிவம்;

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - இரா.சஞ்சீவிராயர்; அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்; 2020-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது - வ.தனலட்சுமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் துறைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வழங்கும் 2021-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது - க.திருநாவுக்கரசு; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வழங்கும் 2021-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கார் விருது - நீதியரசர் சந்துரு; செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும் தேவநேயப்பாவாணர் விருது - கு.அரசேந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய விருதுகளை பெற்ற விருதாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடையையும், தங்கப்பதக்கத்தை அணிவித்து, விருதுத்தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், தகுதியுரையும் வழங்கி சிறப்பு செய்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் வழங்கப்பட்ட தந்தை பெரியார் விருது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் விருதை பெற்றவர்களுக்கு பெறுபவருக்கு பொன்னாடையையும், தங்கப்பதக்கத்தை அணிவித்து, விருது தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், தகுதியுரையும் வழங்கி முதல்-அமைச்சர் சிறப்பு செய்தார்.

சி.பா.ஆதித்தனார் விருது

2021-ம் ஆண்டிற்கான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மாத இதழ் விருது, உயிர்மை மாத இதழுக்கு வழங்கப்பட்டது. விருது தொகையான ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து, உயிர்மை மாத இதழின் ஆசிரியர் எஸ்.அப்துல்ஹமீது என்ற மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.

2021-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வரவேற்புரை ஆற்றினார். தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) செ.சரவணன் நன்றி கூறினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விருது பெற்ற 21 பேரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விழா மேடையில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
1 More update

Next Story