கார் விபத்தில் 9 பேர் பலியான வழக்கு:முன்னாள் ராணுவ வீரருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை
கார் விபத்தில் 9 பேர் பலியான வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெரம்பலூர்,
ஜவுளி வியாபாரி
காஞ்சீபுரம் மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன் (வயது 36). கைத்தறி பட்டுப்புடவையை தயாரித்து ஜவுளிகடைகளுக்கு மொத்தமாக வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி மாலை கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் காரில் புறப்பட்டார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே கார் நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்தவரும், முன்னாள் ராணுவ வீரருமான சக்தி சரவணன் (55) என்பவர் மது போதையில் ஓட்டி வந்த கார், அவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.
9 பேர் பலி
மோதிய வேகத்தில் அந்த கார் நிற்காமல் சினிமாவில் பாய்வது போல் பாய்ந்து மோகன் குடும்பத்தினர் சென்ற கார் மீது விழுந்து விபத்துக்குள்ளாகி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி மோகன், அவரது மனைவி லட்சுமி (32), மகள்கள் பவித்ரா (14), நவீதா (11), மகன் வரதராஜன் (5), மோகனின் அக்காள் கணவரான முரளி (55), மற்றொரு அக்காவின் மகளான மேகலா (19) மற்றும் டிரைவர்கள் பிரபாகரன் (36), பூபதி ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் மேலும் மற்றொரு காரின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதில் அந்த காரில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய சக்தி சரவணனும் படுகாயமடைந்தார்.
18 ஆண்டுகள் சிறை
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த கோர விபத்து தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை முடிந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ், விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் சக்தி சரவணனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.47 ஆயிரத்து 500 அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து சக்தி சரவணனை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story