காட்டு பகுதிக்கு தூக்கிச்சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம் 4 வாலிபர்கள் கைது


காட்டு பகுதிக்கு தூக்கிச்சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம் 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 30 April 2022 1:23 AM IST (Updated: 30 April 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

காட்டு பகுதிக்கு தூக்கிச்சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தஞ்சை புதிய பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.

கூட்டு பலாத்காரம்

அப்போது தஞ்சை அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடி என்கிற கொடியரசன் (25) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். கொடியரசனும் அந்த பெண்ணும் அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த பெண்ணின் அருகில் சென்று கொடியரசன் அவரை வழிமறித்து பேசியுள்ளார். தனக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என்பதால் இளம் பெண்ணும் அவருடன் பேசி உள்ளார்.

பின்னர் திடீரென கொடியரசன் அந்த இளம்பெண்ணை தனது மோட்டார்சைக்கிளில் அங்குள்ள முந்திரி காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு இளம்பெண்ணை கொடியரசனும், அவரது நண்பர்களான சுகுமார்(28), சாமிநாதன்(30), கண்ணன்(27) ஆகியோரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

7 பேர் கைது

நள்ளிரவில் அந்த பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறும், இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று 4 பேரும் சேர்ந்து மிரட்டி அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.

பின்னர் இதுபற்றி வல்லம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடியரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக இளம்பெண் போலீசில் புகார் அளிக்காமல் இருக்க பணம் தருவதாக பஞ்சாயத்து பேசியதாக குருங்குளம் மேற்கு மேட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் வேலுசாமி(60), அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை(40), தமிழரசன்(30) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story