குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்...!


குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்...!
x
தினத்தந்தி 16 May 2022 2:51 AM GMT (Updated: 16 May 2022 2:51 AM GMT)

நாகை அருகே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம்  பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம் உள்ளது.  குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது இளைய குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் விழுந்தது.

அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை  காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். இரு குழந்தைகளும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த  எழிலரசி என்பவர் உடனடியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார்.  தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எழிலரசியின் செயல் பாராட்டுக்குறியது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த குளம் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. தற்போது குளத்தை சுற்றி புதர் மண்டி விட்டது. மேலும் பழைய சுற்றுச்சுவர் பாசி படிந்து சேறும் சகதியுமாக உள்ளது. அறநிலைய துறை இந்த குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Next Story