சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் படுகாயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் படுகாயம்
x

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

700 காளைகளுக்கு அனுமதி

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டி புனித பெரிய அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. முன்னதாக காலை 7 மணி அளவில் ஊர் அழைப்பு, பீஸ் (காளை உரிமையாளர்களுக்கு வேட்டிகளை கொண்டு வருவது) அழைப்பு மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

இதைத்தொடர்ந்து 7½ மணி அளவில், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்க, 700 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

340 வீரர்கள் பங்கேற்பு

இதேபோல் காளைகளை பிடிக்க 350 வீரர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்கு தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 340 பேர் மட்டும் களத்தில் இறங்க தகுதியானவர்கள் என்று மருத்துவ குழுவினர் சான்று அளித்தனர்.

மொத்தம் 14 குழுக்களாக, ஒரு குழுவுக்கு 25 நபர்கள் வீதம் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி நிறமுடைய டி-ஷர்ட்கள் அணிந்து களம் இறங்கினர்.

களம் இறங்கிய காளைகள்

முதலில் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பிறகு மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை, சிவகங்கை, மணப்பாறை, விராலிமலை, கரூர், திண்டுக்கல், புகையிலைப்பட்டி, மைக்கேல் பாளையம், தவசிமடை, வெள்ளோடு, கொசவபட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பிரபலமான காளைகள் களம் இறங்கின.

முன்னதாக அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகே வாடிவாசல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. காளைகளுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில், ஒவ்வொரு காளையாக அதன் உரிமையாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன.

இவ்வாறு சில காளைகளின் பெயர்களை அறிவித்தவுடன், மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக வாடிவாசல் பகுதியில் போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு காளைகளை அடக்கினர்.

மல்லுக்கட்டிய வீரர்கள்

அதேநேரத்தில் சில காளைகளின் பெயர்களை அறிவித்தவுடன் மாடுபிடி வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்கி கொண்டனர். ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுடன், வீரர்கள் மல்லுக்கட்டினர்.

அவிழ்த்து விட்டவுடன் சில காளைகள், வாடிவாசலுக்குள்ளேயே நின்று மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டியது. விழிகளை விரிய வைத்த பார்வை மூலம் சில காளைகள் வீரர்களை மிரள வைத்தன.

திமிலை பிடித்து அடக்க முயன்ற காளையர்களை சில காளைகள் தூக்கி வீசி பந்தாடின. வாடி வாசலை விட்டு வெளியே வந்தவுடன் சில காளைகள் வீரர்களை அங்கும் இங்குமாக துரத்தின.

வீரர்களை மிரட்டிய காளைகளுக்கு, கூடுதல் பரிசுகள் அறிவிக்கப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை திமிலை பிடித்து காளையர்கள் அடக்கிய காட்சியும் அரங்கேறியது.

27 பேர் படுகாயம்

இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 12 பேர் காயம் அடைந்தனர். இதேபோல் மாட்டின் உரிமையாளர்கள் 7 பேரும், பார்வையாளர்கள் 8 பேரும் என மொத்தம் 27 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து திமிறிய காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அதன்படி நாற்காலிகள், சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், ரொக்கம், குத்துவிளக்கு, வெள்ளி நாணயங்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஜெயன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரி, மாநில வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ் பாபு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திருவள்ளுவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story