3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு


3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு
x

3 நாட்கள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை,

பொதுவாக தொடர் விடுமுறை வந்தாலே ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்தான். இடைப்பட்ட நாட்களில் அவர்களுக்கு கிடைக்காத வருவாயை இந்த சில நாட்களில் மொத்தமாக பயணிகளிடம் இருந்து வசூலித்து விடுகின்றனர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில் அரங்கேறிவந்த இந்த கட்டண கொள்ளை, தற்போது தொடர் விடுமுறை என்றாலே வழக்கமாகிவிட்டது.

இந்த கட்டண கொள்ளை ஏதோ திரைமறைவில் நடப்பதும் இல்லை. வெட்டவெளிச்சமாக ஆன்லைனில் திறந்த உடனேயே தெரியும் அளவுக்கு, எக்குத்தப்பாக கட்டணத்தை ஏற்றிவைத்து பயணிகளை அதிர வைக்கின்றனர்.

தற்போது சுதந்திர தின விழாவையொட்டி, 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. அதை பயன்படுத்தி வழக்கம்போல ஆம்னி பஸ்களின் கட்டணத்தை 'கிடுகிடு'வென உயர்த்தி கிறுகிறுக்க வைத்துள்ளனர்.

3 மடங்கு உயர்வு

உதாரணமாக, சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் ரூ.1,000 என்று இருந்த நிலையில், விடுமுறையை முன்னிட்டு, ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரையில் நிர்ணயித்துள்ளனர்.

அதேபோல், ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்குச் செல்வதற்கு ரூ.3 ஆயிரத்து 950, சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்ல ரூ.3 ஆயிரத்து 200, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்ல ரூ.3 ஆயிரத்து 900, சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல ரூ.3 ஆயிரம் என்ற அளவில் ஆம்னி பஸ்களின் கட்டணம் நேற்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த கட்டணங்கள் எல்லாம் வழக்கமான நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 3 மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகம். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். கண்டிப்பாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும், விடுமுறையை குடும்பத்தினருடன் செலவழிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த கட்டண உயர்வை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு 'புக்' செய்து, புலம்பியபடியே பயணித்ததையும் பார்க்க முடிந்தது.

கடுமையான நடவடிக்கை இதுதானா?

ஆனால் சாதாரண மக்களோ, இவ்வளவு கட்டணமா? மற்ற நாட்களில் இந்த கட்டணத்தில் நான் 4 முறை ஊருக்கு சென்று வந்துவிடுவேனே? இதை அரசு கவனிக்கிறதா, இல்லையா? என்று தங்களுடய மனக்குமுறலை வெளியிட்டபடி, மாற்று பயண வழியை தேடிச்சென்றனர்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்போது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது, நடைமுறைபடுத்தப்படுவது இல்லை என்று பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு பிறப்பிக்கும் உத்தரவின்படி கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், தொடர்ச்சியாக இப்படி கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வசூலிப்பார்களா? அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கை இதுதானா? என காட்டமாக தங்களுடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் பயணிகள் பதிவு செய்ததோடு, முதல்-அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு, பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story