இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி
x

இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

கரூர்

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 3 பகுதிகளில் அரசு பஸ் மோதியும், அரசு பஸ்சில் இருந்து விழுந்தும் பெண் உள்பட 3 பேர் சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்தனர். இந்தநிலையில் இழப்பீடு தொகை வழங்கக் கோரி விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்த நீதிபதி இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதன் பின்னர் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் இல்லையெனில் அரசு பஸ்களை ஜப்தி செய்ய வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டு இருந்துள்ளார். இதன் பிறகும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்கவில்லையாம். இதையடுத்து நேற்று குளித்தலை பஸ் நிலையத்திற்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் 3 அரசு பஸ்களை ஜப்தி செய்து அந்த பஸ்களை நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தினர். இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையை வழங்குவதாக கூறியதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பஸ்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story