41,773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: கலெக்டர்


41,773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: கலெக்டர்
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 41,773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேசிய அடையாள அட்டை

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், வியாழக்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 ஆயிரத்து 773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 2022-2023 நிதியாண்டில் 110 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு நவீன வசதிகளுடன் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 885 பேருக்கு திறன்பேசி வழங்கப்பட்டு உள்ளது. 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்), தசை சிதைவு நோய், தொழு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்தவர்கள், மல்டிபுல் ஸ்களெரோசிஸ், பார்கிங்சன்ஸ் நோய் மற்றும் 75 சதவீதம் கடும் உடல் பாதிப்பு உடைய மாற்றுத்தினாளிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 554 பேருக்கு ஆண்டுக்கு ரூ.15 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை

கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாண- மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1000 வீதமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000 மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4000 வீதமும், இளங்கலை பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,000 வீதமும் மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.7000 வீதமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 8 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவியும், 176 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்து மரணம் நிதியுதவி ரூ.1 லட்சம் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவி ரூ.17 ஆயிரம் வீதம் 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை அவையம் (செயற்கை கால், கை) செய்து வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story