கனியாமூர் பள்ளியை படம் எடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல்: அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது


கனியாமூர் பள்ளியை படம் எடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல்:   அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது
x

கனியாமூர் பள்ளியை படம் எடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

தலைவாசல்

கனியாமூர் பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணம் அடைந்ததை ஒட்டி கலவரம் நடைபெற்றது. இந்த நிலையில் கலவரத்தில் சேதம் அடைந்த பள்ளியை சீரமைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. அதன் பேரில், பள்ளியில் சீரமைக்கும் பணியை அதன் நிர்வாகம் நேற்று முன்தினம் தொடங்கியது.

பள்ளி சீரமைக்கும் பணியை படம் எடுப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு வார பத்திரிகை செய்தியாளர் மற்றும் கேமராமேன் கார் மூலம் வந்தனர். காரை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பள்ளியை படம் எடுக்க சென்றனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் படம் எடுக்க கூடாது என தடுத்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாக்குதல்

இதற்கிடையில் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த சிலர், செய்தியாளர், கேமராமேனை தாக்க முயற்சி செய்தனர். உடனே அவர்கள் காரை எடுத்துக்கொண்டு தலைவாசல் நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சிலர் காரை துரத்தி சென்று தலைவாசல் பஸ் நிலையம் அருகே வழிமறித்து காரில் இருந்தவர்களை தாக்கினர்.

இதில் கேமராமேன் அஜித்குமாரின் பல் உடைந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இருவரையும் மீட்டு தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைவாசல் போலீசார் விசாரித்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவர்களை தாக்கியவர்கள், காரில் வந்த2 பேரும் எங்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் வந்ததால் அவர்களை பின் தொடர்ந்து வந்ததாகவும் காரில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். அவர்களிடம் நீங்கள் சின்னசேலத்தில் புகார் கொடுக்கலாம் என தகவல் தெரிவித்து போலீசார் அனுப்பினர்.

5 பேர் கைது

வார பத்திரிகை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், போலீசிடம் அளித்த புகாரில் என்னையும், கேமரா மேனையும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் கடுமையாக தாக்கி கடத்த முயற்சி செய்தனர். காரை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் என்னிடம் இருந்த மோதிரம், செல்போனை பறித்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த செல்வராஜ் (36), தீபன் சக்கரவர்த்தி (36), செல்வகுமார் (38) பாலகிருஷ்ணன் (45) கனியாமூர் திருப்பதி நகர் பகுதியில் உள்ள அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன் (44) ஆகிய 5 பேர் மீது சொத்தை சேதப்படுத்துதல் உள்பட 8 பிரிவுகளில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தார்.

தனியார் பள்ளியில் படமெடுக்க சென்ற வார பத்திரிகை செய்தியாளர் மற்றும் கேமரா மேன் தாக்கப்பட்ட சம்பவம் தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story