தங்கையுடன் லிப்டில் சிக்கி தவித்த சிறுவன்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள லிப்டில் சிறுவன் ஒருவன் தனது தங்கையுடன் சிக்கினான். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
டிக்கெட் எடுக்க சென்றார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின். இவர் நேற்று காலை சென்னை செல்வதற்காக அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அவர் தனது பெண் குழந்தையை உடன் அழைத்து வந்திருந்தார். அவர்களை வழியனுப்புவதற்காக யாஸ்மின் மகன் 7-ம் வகுப்பு படிக்கும் ரியாஸ் வந்திருந்தான்.
அப்போது சென்னைக்கு செல்லும் ரெயில் இரண்டாம் நடைமேடைக்கு வரும் என்று அறிவித்தனர். இதனால் யாஸ்மின் குழந்தையை மகனிடம் கொடுத்து இரண்டாம் நடைமேடைக்கு சென்று காத்திருக்கும் படி கூறிவிட்டு டிக்கெட் வாங்குவதற்காக சென்று உள்ளார்.
லிப்டில் சிக்கினர்
சிறுவன் ரியாஸ் தனது தங்கையுடன் இரண்டாம் நடை மேடைக்கு லிப்டில் ஏறி உள்ளார். சிறிது தூரம் சென்றதும் திடீரென லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது. லிப்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் சிறுவன் அதிர்ச்சிடைந்து செய்வது அறியாமல் திகைத்து நின்றுள்ளான். அத்துடன் குழந்தை அழத்தொடங்கியது.
சிறுவனுக்கு பின்னால் வந்த பயணிகள் லிப்ட் இயங்காததைக் கண்டும், உள்ளே சிறுவன் குழந்தையுடன் சிக்கி இருப்பதை பார்த்தும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே மகனைத் தேடி வந்த யாஸ்மின் மகன் மற்றும் குழந்தை லிப்டில் சிக்கி இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்து கதறினார்.
மீட்பு
விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் லிப்டை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களில் பழுதை சரி செய்து லிப்டை இயக்கி சிறுவன் மற்றும் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைகள் மீட்கப்பட்டதும் நிம்மதி அடைந்த யாஸ்மின் கண்ணீருடன் மகனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சென்னைக்கு குழந்தையுடன் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததே இது போன்ற கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர்.