சாலை இரும்பு தடுப்பில் மொபட் மோதி நர்ஸ் பலி


சாலை இரும்பு தடுப்பில் மொபட் மோதி நர்ஸ் பலி
x
தினத்தந்தி 2 Oct 2022 7:52 PM GMT (Updated: 2 Oct 2022 8:04 PM GMT)

சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு சாலை இரும்பு தடுப்பில் மொபட் மோதியதில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பலியானார்.

சேலம்

சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு சாலை இரும்பு தடுப்பில் மொபட் மோதியதில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பலியானார்.

தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மகள் யோகபிரியா (வயது 24). இவர் சேலம் டால்மியா போர்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வேலைக்கு வந்தார்.

பின்னர் வேலையை முடித்து விட்டு, இரவு 9 மணி அளவில் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இரும்பு தடுப்பில் மோதி பலி

இதற்காக சாலையோரம் குறுகிய பாதை அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தடுப்புகள் (பேரிக்கார்டு) ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் யோகபிரியா அந்த பகுதியில் சென்றபோது, மொபட் நிலைதடுமாறி இரும்பு தடுப்பில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் சேலம்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து சீரமைப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் விபத்தில் பலியான யோகபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது என்றும், எனவே மின்விளக்குகள் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story