நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை


நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை
x

விழுப்புரம்- புதுச்சேரி, சென்னை மார்க்கங்களில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஹரிக்குமார், சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் திருச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 10.45 மணியளவில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் ரெயில் நிலைய நடைமேடைகளை பார்வையிட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் இடத்தை கோட்ட மேலாளர் ஹரிக்குமார் பார்வையிட்டார். அப்போது அங்கு ரெயில் பெட்டிகள் முறையான தொழில்நுட்பத்துடன் பராமரிக்கப்படுகின்றதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரெயில்வே மைதானம் அருகில் உள்ள என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர்களுக்கான ஓய்வறைகளை பார்வையிட்டு அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்றும் ஓய்வறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு கோட்ட மேலாளர் ஹரிக்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயணிகள் ரெயிலை இயக்க ஏற்பாடு

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படும் ரெயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். அதேபோல் ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ரெயில்வே போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் தொடர்பாக உரிய முறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையங்களுக்கு வெளியே ரெயில்கள் நிற்கும் இடங்களில் குற்றங்கள் நடப்பதை தடுக்கவும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஊரடங்கு காலத்தின்போது நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் உடனே இயக்க வாய்ப்பில்லை. பயணிகளின் தேவையை கருதி ஒவ்வொரு ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விழுப்புரம்- புதுச்சேரி, விழுப்புரம்- சென்னை மார்க்கங்களில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்குவதற்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ரெயில்கள் இயக்க உரிய ஏற்பாடு செய்யப்படும். தற்போது விழுப்புரம்- சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க

தற்போதைய நிலையில் விழுப்புரம்- காட்பாடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு அதிகளவிலான நிதி தேவைப்படுவதால் அதுகுறித்து தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இருக்கும் ரெயில் பாதையில் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து இயக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்க முடியும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story