'அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை' எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திட்டங்கள் முடக்கம்
அ.தி.மு.க. தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களது உயிர் உள்ளவரை மக்களுக்காக உழைத்தனர். ஆனால் தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. விரைவில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சராக போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் திரைப்படத்தில் நடிப்பது அவர்களின் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றத்தான். திரைத்துறையில் கூட கமிஷன் வாங்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது. இவர்கள் அரசியலில் மட்டுமல்ல, திரைத்துறையிலும் யாரையும் விடவில்லை.
தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது. அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு பதவி கொடுக்கின்றனர். தி.மு.க.வில் உழைப்புக்கு மரியாதை இல்லை. அதனால் அது தேய்ந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3-ல் ஒரு பகுதி நாட்கள் முடிந்து விட்டன. இதனால் மக்கள் என்ன பயன்பெற்றனர்? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் சாதனை.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் நீரை சேமித்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1,252 கோடி மதிப்பீட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டம் தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நிறைய தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்தோம். ஜெயலலிதா ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவற்றையும் இந்த ஆட்சியில் கைவிட்டனர். எனவே அ.தி.மு.க. மட்டுமே மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் கட்சி ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.