நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றிபெறும் -எடப்பாடி பழனிசாமி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றிபெறும் -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு என்பது நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த தீர்ப்பு என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எங்களிடம் நியாயம் இருந்தது. அதனால் தீர்ப்பு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. பலமாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி இருக்கும். இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

சசிகலாவின் கார் டிரைவர்

கோடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். ஒரு ஆட்சி இருக்கும்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவத்தை அரசு சட்டரீதியாக அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டுமென்றே இன்றைய ஆட்சியாளர்கள் சம்பவத்தை திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

தனபால் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இன்றைய ஆட்சியாளர்களே அவரை விசாரணைக்கு அழைத்து சென்று 3 மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்று கனகராஜை இனி யாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் கார் டிரைவராக இருந்தவர். மீறி ஜெயலலிதாவின் கார் டிரைவர் என கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு.

நிரூபித்து காட்டியுள்ளோம்

மதுரையில் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி காட்டியுள்ளோம். இனி யாரும் அ.தி.மு.க. இரண்டாக, மூன்றாக சென்று விட்டது என்று கூறவேண்டாம். ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம்.

சந்திரயான்-3 நிலவில் இறங்கியது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. இந்தியா வல்லரசு நாடாக உயர்நநநவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முன்னே நின்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். அ.தி.மு.க. சார்பாக அவருக்கு பாராட்டு தெரிவித்துவிட்டோம்.

கட்சியில் இடம் இல்லை

ஒரு சிலரை தவிர்த்து அ.தி.மு.க.விற்காக உழைத்தவர்கள் பிரிந்து சென்று மீண்டும் கட்சிக்குள் வர நினைத்தால் இணைத்து கொள்வோம். சிலர் கட்சியின் ரீதியாக வளர்ந்து அதிகாரத்திற்கு வந்து எப்படி இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் விளைவித்துள்ளனர். இன்றைய ஆளும் கட்சியுடன் சேர்ந்து அ.தி. மு.க.வை அழிக்க நினைத்தவர்கள், எட்டப்பனாக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story