அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமியை முகநூலில் விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம் மகன்கள்


அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால்  எடப்பாடி பழனிசாமியை முகநூலில் விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம் மகன்கள்
x

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் முகநூலில் கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தேனி

ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் நீக்கம்

சென்னை வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான ப.ரவீந்திரநாத் எம்.பி. (தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்), வி.ப.ஜெயபிரதீப் உள்பட 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முகநூலில் சாடல்

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் தங்களின் முகநூல் பக்கத்தில் பரபரப்பான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் அங்கீகாரம் நாடாளுமன்றத்தில்... இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா (ஜெயலலிதா) எனக்கு கொடுத்த வரம். அதை நீக்கவும், ஒதுக்கவும், எடுக்கவும் கோமாளி கூடாரத்துக்கு இல்லை அதிகாரம். கொல்லைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகுதூரம். பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்து இடையில் வந்த 'எடை' இல்லாத 'பாடி'க்கு விடை கொடுக்க வந்து விட்டது நேரம். ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே, ஒன்றிணைவோம். ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்" என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார்.

தர்மத்தின் பாதை

வி.ப.ஜெயபிரதீப் 'சத்தியமே ஜெயம்' என்று குறிப்பிட்டு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும், யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும், நேர்மையாக மக்கள் பணி செய்து, யாருடைய நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியும், கிண்டலும், பொய்களும், விமர்சனங்களும், சூழ்ச்சிகளும், துரோகங்களும் எதிர்கொள்ளும் போது, என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இறுப்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது. 2001-ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்த பிறகு கட்சி சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று கொள்கை முடிவு எடுத்ததால் அமைதியாக இருக்கிறேன். எவ்வித சோதனைகளை சந்தித்தாலும், அம்மாவின் (ஜெயலலிதா) ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கட்சி சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story