கொள்ளளவு குறைந்ததால் விவசாயம் பாதிப்பு: -தொட்டியபட்டி கண்மாய் நீர்வரத்தை தடுக்கும் மதகுகளை அகற்றக்கோரி வழக்கு- கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு


கொள்ளளவு குறைந்ததால் விவசாயம் பாதிப்பு: -தொட்டியபட்டி கண்மாய் நீர்வரத்தை தடுக்கும் மதகுகளை அகற்றக்கோரி வழக்கு- கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

தொட்டியபட்டி கண்மாய்க்கு நீர் வருவதை தடுக்கும் வகையில் உள்ள மதகுகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை


தொட்டியபட்டி கண்மாய்க்கு நீர் வருவதை தடுக்கும் வகையில் உள்ள மதகுகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கண்மாய்க்கு நீர் வரத்து பாதிப்பு

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா, தொட்டியபட்டியைச் சேர்ந்த கொப்பையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் ஊரில் தொட்டியபட்டி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பருவமழை பெய்தபோதும், பல வருடங்களாக நிரம்பவில்லை. அதேபோல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் பல்வேறு கண்மாய்கள் நிரம்பியபின்பு வைகை தண்ணீர் எங்கள் கண்மாய்க்கு வருவது இல்லை. இதனால் வளையபட்டி கண்மாயில் இருந்து தொட்டியபட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரும் வகையில் நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து தரக்கோரி எங்கள் கிராமம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, எங்களது கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் நிலையூர் கால்வாய் அருகில் ஒரு மதகு அமைத்து, தொட்டியபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மதகுகளை அப்புறப்படுத்துங்கள்

அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் நடந்தன. இதை ஆய்வு செய்தபோது, தொட்டியபட்டி கண்மாய்க்குள் தண்ணீர் நுழையும் இடத்தில் 2 மதகுகள் அமைத்து, ஒரு மதகு வழியாக இந்த கண்மாய்க்கும், மற்றொரு மதகு வழியாக நெடுமதுரை கண்மாய்க்கும் தண்ணீர் செல்லும் வகையில் மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக தொட்டியபட்டி கண்மாய்க்குள் 300 அடிக்கு கரையை சேதப்படுத்தி, தடுப்பு சுவர் எழுப்பி நெடுமதுரை கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்துள்ளனர்.

இதனால் எங்கள் கண்மாயின் நீர் கொள்ளளவு குறைக்கப்பட்டு, கிராமத்தினரின் நீர் தேவை பூர்த்தியாவது தடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தினால் எங்கள் கிராமத்திற்கு எந்த பலனும் இல்லை. எனவே நெடுமதுரை கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள மதகையும், தடுப்புச்சுவரையும் அகற்ற வேண்டும். மறுகால் பாய்வது மூலம் நெடுமதுரை கண்மாய்க்கு தண்ணீர் செல்ல உரிய வசதி செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

கலெக்டருக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் சதீஷ்பாபு ஆஜராகி, வழக்கமாக ஒரு கண்மாயில் நீர் நிறைந்து மறுகால் பாய்வதன் மூலம்தான் அடுத்த கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆனால் விதிகளுக்கு முரணாக தொட்டியபட்டி கண்மாய் கரையை சேதப்படுத்தி, அதன் கொள்ளளவை குறைத்து மற்றொரு கண்மாய்க்கு தண்ணீர் கடத்தும் வகையிலான பணிகள் ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story