சென்னையில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது
சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பூர் தெற்கு பகுதி கழகச் செயலாளராக உள்ளார். நேற்று இரவு கட்சிப் பணிகள் முடிந்து வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவன் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 5 படாக் கத்திகள் பறிமுதல் செய்தனர்.