அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: : விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு


அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு:    : விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 July 2022 11:11 AM GMT (Updated: 14 July 2022 11:21 AM GMT)

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை,

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில்,"அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது .ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை.தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தோம். உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை" என்றார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதலின்போது, போலீஸ் தலையிட்டதால்தான் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

அதிமுக அலுவலகத்திற்கு சீல் ஏன்?

கடந்த 11 ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒரு புறம் நடைபெற, மற்றொருபுறம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சி அலுவலகத்தின் வெளியே இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் சரமாரியாக மோதிக்கொண்ட நேரத்தில், இந்த 2 கூட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் கட்சி அலுவலகம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே இருதரப்பு ஆதரவாளர்கள் மோதலால் கட்சி அலுவலகம் போர்களமானதால், எடப்பாடி பழனிசாமி வருகை தந்தால் இன்னும் நிலைமை மோசமாகி விடும் என்பதை போலீசார் உணர்ந்தனர்.

ஒரு பொது சொத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அந்த சொத்தை சீல் வைப்பதற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145 பிரிவின் கீழ் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கும் முடிவை போலீசார் எடுத்தனர்.


Next Story