அதிமுக அலுவலகம் சீல்: எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு


அதிமுக அலுவலகம் சீல்: எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
x

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதையடுத்து, போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதன் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். பின்னர் அ.தி.மு.க. அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன்பக்க கதவு, முன்பக்க நுழைவுவாயில் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சீல் வைத்தனர். பின்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.


Next Story