தமிழகம் முழுவதும் 20-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழகம் முழுவதும் 20-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 20-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறி விலையும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது.

இடர்ப்பாடான நேரங்களில் விலைவாசி உயர்வு ஏற்படும்போது அ.தி.மு.க. அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தது.

பல்வேறு துறைகளில் ஊழல்

அதேபோல், தமிழ்நாட்டு மக்கள் 10 ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது தி.மு.க. அரசு. அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம், அதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, வெளியூர் பஸ்களின் கட்டணம் உயரவும் அனுமதித்தது.

அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலில் திளைக்கின்ற தி.மு.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வளவு அவலங்கள், வன்முறைகள், விலைவாசி உயர்வு, பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல், எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

எனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும், அதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story