கவர்னர் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி
கவர்னர் உருவப்பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டித்து போராட்டம் நடத்தவும், அவருடைய உருவப்பொம்மை எரிக்கவும் ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று திட்டமிட்டனர். இதற்காக மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், அதியர்மணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சிலர் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் வந்தனர். அப்போது அவர்கள், கவர்னரின் உருவப்பொம்மையை கையில் எடுத்து வந்தனர். அதனை, தீ வைத்து எரிக்க முயன்றனர். போலீசார் அதை தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள், உருவப்பொம்மையை போலீசார் பறிமுதல் செய்து விடக்கூடாது என்று சாலையில் ஓட்டம் பிடித்தனர். போலீசாரும் அவர்களை துரத்திச் சென்று அவர்களிடம் இருந்து உருவப்பொம்மையை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கவர்னரை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.