முத்துப்பேட்டையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது


முத்துப்பேட்டையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

முத்துப்பேட்டையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

திருவாரூர்

முத்துப்பேட்டையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

48 பவுன் நகைகள் கொள்ளை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது70). இவருடைய வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 48 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பான புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், ஏட்டுகள் சுரேஷ், ராஜா, ரமேஷ், தன்பென்ராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சந்தேகத்தின்பேரில் கருப்பையாவின் தம்பி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் கவுசல்யா (22) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் 2 மாதங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்த துக்க நிகழ்வுக்கு வந்திருந்தபோது பீரோவில் இருந்த 48 பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 28 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தோழியின் சகோதரர்

மீதம் உள்ள நகைகளை மீட்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் மீதம் உள்ள 20 பவுன் நகைகளை தனது தோழியின் சகோதரரான ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள ஏ.ஆர். மங்கலத்தை சேர்ந்த மாயழகு மகன் கரிகாலன் (27) என்பவரிடம் கவுசல்யா கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கி இருந்த கரிகாலனை கைது செய்து அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை மீட்டனர்.


Next Story