கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை


கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை
x

கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி கல்லீரல் கொழுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா பரவல் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. கேரளா, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த தொற்று பரவல் தற்போது உயர்ந்துள்ளது. எனினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாக தான் பாதிப்பு உள்ளது.

பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வகை உருமாறிய கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டு உள்ளதால், 4-வது அலை தொடங்கியதற்கான அறிகுறிகளாகும். தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். செலுத்தாத நபர்களுக்காக 12-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் முகாம்கள் நடைபெற உள்ளது. அதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தனியார் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதால், அரசு ஆஸ்பத்திரிகளில் கருத்தரிப்பு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் விரைவில் சிகிச்சை வழங்கப்படும். கருமுட்டை தான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story