கீழடி பகுதியில் 9-ம் கட்ட அகழாய்வு முதுமக்கள் தாழியில் 2 சூதுபவள மணிகள் தொல்லியல் அதிகாரிகள் வியப்பு
கீழடி பகுதியில் கொந்தகையில் நடந்துவரும் 9-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து 2 சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன.
திருப்புவனம்
கீழடி பகுதியில் கொந்தகையில் நடந்துவரும் 9-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து 2 சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன.
அகழாய்வு பணிகள்
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகையில் தற்போது 9-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
இதில் கொந்தகையில் ஏற்கனவே நடந்த அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
அதிலும் கடந்த ஆண்டு நடந்த 8-ம் கட்ட அகழாய்வில் மட்டும் 50-க்கும் ேமற்பட்ட முதுமக்கள் தாழிகள் அகழாய்வு குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இருந்த மண்ணை அகற்றி, உள்ளே இருந்த பொருட்களை சேகரித்தபோது மனித மண்டை ஓடு, கை-கால் எலும்புகள், விலா எலும்புகள், சிறிய மண்பானை, சிறிய மண்சட்டி போன்றவை கிடைத்தன. அவை அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை போலவே இப்போது நடந்துவரும் 9-ம் கட்ட அகழாய்விலும் கொந்தகையைில் முதுமக்கள் தாழிகள் அகழாய்வு குழிகளில் கிடைத்து வருகின்றன.
இதுவரை 24 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அவற்றை சேதம் இல்லாமல் எடுக்க லாவகமாக சுத்தப்படுத்துகிறார்கள்.. அதே நேரத்தில் சில தாழிகள் மட்டும் உடைந்தே இருப்பதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூதுபவள மணிகள்
9-ம் கட்ட அகழாய்வில் கிடைத்திருக்கும் 24 தாழிகளில் ஒரு சிலவற்றை திறந்து, அதனுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள், மண்சட்டி ஆகியவற்றை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேதம் அடைந்த நிலையில் இருந்த ஒரு தாழியை ேநற்று திறந்து அதன் உள்ளே இருந்த பொருட்களை எடுத்தனர். அப்போது உள்ளே 2 சூதுபவள மணிகள் கிடைத்தன.
முதுமக்கள் தாழியினுள் ஒரு சூது பவளம் 17.5 செ.மீ. ஆழத்திலும், மற்றொரு சூதுபவளம் மணி 20 செ.மீ. ஆழத்திலும் கிடைத்துள்ளது. சூதுபவள மணிகளின் நீளம் 1.4 செ.மீ., விட்டம் 2 செ.மீ. என கூறப்படுகிறது. முற்காலத்தில் இந்த சூதுபவள மணிகளை பெண்கள் ஆபரணத்துடன் இணைத்து அணிந்தார்களாம். இந்த சூதுபவளங்கள் தொல்லியல் அதிகாரிகளை வியக்க வைத்துள்ளன.
கீழடி 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் இந்த வாரத்துடன் நிறைவுபெறும். பிறகு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடக்க உள்ளது.