கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 115 பேர் கைது


தினத்தந்தி 16 Aug 2022 8:35 PM GMT (Updated: 16 Aug 2022 8:36 PM GMT)

கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு, கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 115 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோடு

கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு, கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 115 பேரை போலீசார் கைது செய்தனர்.

கனல் கண்ணன் கைது

இந்து முன்னணியின் கலை பண்பாட்டு பிரிவு மாநில செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன், பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை நிலவியது.

115 பேர் கைது

இந்து முன்னணியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்திமுருகேஷ் தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வீரப்பன்சத்திரத்துக்கு வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றும், திரும்பி செல்லுமாறும் அறிவுறுத்தினார்கள். ஆனால் தடையை மீறி அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியினருடன் சேர்ந்து பா.ஜ.க. தெற்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் பிரகாஷ், தரவு மேலாண்மை பிரிவு மாநில துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார்கள். அவர்களையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றார்கள். எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணியினர் உள்பட மொத்தம் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கோபியில் பஸ் நிலையம் அருகே 2 இடங்களிலும், மொடச்சூர், கலராமணி, கச்சேரி மேடு ஆகிய இடங்களிலும் இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, குருசாமி ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டதாக 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையொட்டி கோபி, சத்தியமங்கலம், பவானி போலீஸ் இன்ஸ்ெபக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் ஈரோடு, கோபி பகுதியில் இந்து முன்னணியினர் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story