போலி ஆவணம் மூலம் நிலமோசடி; சினிமா துணை நடிகர் கைது


போலி ஆவணம் மூலம் நிலமோசடி;   சினிமா துணை நடிகர் கைது
x

போலி ஆவணம் மூலம் நிலமோசடியில் சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை அழகப்பன்நகர், சுந்தரர் தெருவை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ராஜரத்தினம். இவரது மனைவி வினோதா. இவர் மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், எனக்கு தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் பகுதியில் ஒரு நிலம் காலியாக உள்ளது.

அதனை அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி மற்றும் சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தனர். இதற்கு எதிராக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வள்ளி தலைமையிலான கும்பல், அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம், பிரபாகரன் என்பவருக்கு விற்று உள்ளனர்.

இதற்கு முத்துப்பாண்டி, குருசாமி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மாநகர நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நிலமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். முத்துப்பாண்டி சினிமாவில் துணை நடிகர் ஆவார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குருசாமி இறந்து விட்டார். அவர்களை தவிர வள்ளி, பிரபாகரன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முத்துப்பாண்டியை சிறையில் அடைக்க சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அழைத்துச் சென்றனர்.

மத்திய சிறையில் காவலர் செல்வம் பணியில் இருந்தார். அப்போது முத்துப்பாண்டி பீடி புகைக்க சென்றதால் காலதாமதம் ஆனதாகவும், இதையடுத்து முத்துப்பாண்டியை அழைத்து வந்த போலீசாருக்கும், சிறைக்காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் சிறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இருதரப்பிலும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது அதைத் தொடர்ந்து முத்துப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story