சாராயம் விற்ற 2 பெண்கள் கைது-100 லிட்டர் ஊறல் அழிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பொம்மிடி, வத்தல்மலை, முத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தம்பட்டி சின்ன ஊத்துக்குழி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மனைவி பச்சியம்மாள் (வயது 50), மணி மனைவி கோவிந்தம்மாள் (45) ஆகியோர் சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் தயாரிக்க வைத்திருந்த 100 லிட்டர் ஊறலையும் கைப்பற்றி, அதனை தரையில் கொட்டி அழித்தனர்.