திண்டுக்கல்லில் பா.ஜ.க. நிர்வாகி கார்-மோட்டார் சைக்கிள்களை எரித்த வாலிபர் கைது
திண்டுக்கல்லில், பா.ஜ.க. நிர்வாகி கார் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்களை எரித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில், பா.ஜ.க. நிர்வாகி கார் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்களை எரித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தீ வைத்து எரிப்பு
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர், திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜ.க. தலைவராக உள்ளார். இவருடைய அலுவலகம் திண்டுக்கல்-தேனி சாலையில் குடைப்பாறைப்பட்டியில் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புறம் பழைய வாகனங்களை நிறுத்துவதற்காக தகரத்தால் குடோன் அமைத்துள்ளார். அந்த குடோனில் அவருடைய காரும், அதற்கு வெளியே 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அவர் நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அவருடைய குடோனில் நிறுத்தப்பட்டிருந்த கார், அதன் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தன.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் கார், 7 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வாலிபர் கைது
மேலும் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 4 பேர், கார், மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் (வயது 29) உள்பட 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிக்கந்தரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தினல் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.