ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பந்தல் கால் நடும் விழா
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் நேற்று பந்தல்கால் நடப்பட்டது.
நெல்லை:
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் நேற்று பந்தல்கால் நடப்பட்டது.
ஆனி தேர் திருவிழா
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு நெல்லையப்பர் கோவில் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருகிற ஆனி மாதம் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமான பந்தல் கால் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. கோவில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதியில் உள்ள வாசல் மண்டபம் அருகில் பந்தல்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
ஜூலை 11-ந்தேதி தேரோட்டம்
ஆனிப்பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக டவுன் புட்டாபுராத்தி அம்மன் கோவில் திருவிழா வருகிற 5-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), விநாயகர் திருவிழா 15-ந்தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து ஆனிப்பெருந்திருவிழா ஜூலை மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் 11-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.