அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத வங்கிக்கு அபராதம்: தேனி நுகர்வோர் கோர்ட்டு அதிரடி உத்தரவு


அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத வங்கிக்கு அபராதம்: தேனி நுகர்வோர் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத வங்கிக்கு அபராதம் விதித்து தேனி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி

தேசியமயமாக்கப்பட்ட வங்கி

பெரியகுளம் வடகரை வடக்கு பாரஸ்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் என்ற ஆரோக்கியசாமி. விவசாயி. கடந்த 2014-ம் ஆண்டு இவர், பெரியகுளத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் 17 கிராம் நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் விவசாய கடன் பெற்றார். 2015-ம் ஆண்டு நகையை திருப்ப வங்கிக்கு சென்றார். வட்டியுடன் ரூ.30 ஆயிரத்து 640 வங்கியில் செலுத்தினார்.

ஆனால் வங்கி நிர்வாகம் அவருக்கான நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. ஆரோக்கியசாமியின் மகள் ஏஞ்சல் கேபிரியட் விர்ஜிலியாவின் பெயரில் ரூ.2 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளதால் அந்த கல்விக்கடனை செலுத்தினால் தான் நகையை திருப்பி கொடுப்போம் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது. தனது மகள் பி.எஸ்சி. நர்சிங் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பதாகவும், நகையை திருப்பிக் கொடுக்குமாறும் அவர் கேட்டார். ஆனாலும் வங்கி நிர்வாகம் நகையை கொடுக்க மறுத்தது. இதனால், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த வக்கீல் ஜோசப் மூலம், தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ஆரோக்கியசாமி முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அபராதம்

அதில், வங்கியின் கிளை மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய இருவரையும் எதிர்தரப்பினர்களாக குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணையை தொடர்ந்து நுகர்வோர் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ஆரோக்கியசாமி மகளுக்காக பெற்ற கல்விக் கடன் நிலுவை தொகையை சுலப தவணைகளாக பிரித்து 12 மாதங்களுக்குள் செலுத்துவதற்கு தகுந்த கால அவகாசம் வழங்க வேண்டும்.

அடகு வைத்த 17 கிராம் நகையை ஒரு மாத காலத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். எதிர்மனுதாரர்கள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், சேவை குறைபாட்டுக்கு ரூ.10 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story