அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ஸ்ரீமுஷ்ணம் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் வடக்கு தெருவில் உள்ளது தாமரை விநாயகர் கோவில். இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த நிலையில், கோவில் கதவை கணேசன் பூட்டி சென்றார்.
பின்னர் நேற்று காலை வழக்கம் போல், அவர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கோவிலுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது, அங்கு கருவறைமுன்பு உள்ள பெரிய உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும், கருவறையில் இருந்த உண்டியல் குடமும் கொள்ளைபோயிருந்தது.
பணம் கொள்ளை
இதுகுறித்து பூசாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அதில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண், நேற்று முன்தினம் இரவு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதாகவும், அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்து பார்க்கையில், கோவிலுக்கு பின்பகுதி அருகே, மோட்டார் சைக்கிள்கள் செல்லும் சத்தம் கேட்டதாக போலீசில் தெரிவித்தார்.
இதன் மூலம் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளயைடித்து சென்று இருப்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கோவில் பெரிய உண்டியல் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதை கும்பாபிஷேகத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம், என்று முடிவு செய்து இருந்துள்ளார்கள். இதன் மூலம் 2 உண்டியல்களையும் சேர்த்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் காணிக்கை பணம் இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
மற்றொரு கோவில்
இதேபோன்று, ஸ்ரீமுஷ்ணம் அருகே வலசக்காட்டில் ஏரிக்கரை தெருவில் வீரனார் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக வேல்முருகன் (வயது 55) என்பவர் உள்ளார். இந்த கோவில் உண்டியல் முன்பு இருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த தனித்தனி புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.