தஞ்சை மாவட்டத்தில் ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை


தஞ்சை மாவட்டத்தில்  ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை
x

தஞ்சை மாவட்டத்தில் ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.10¼ லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கடலை சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரும் ரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆய்வுக்குழு

கடந்த 15-ந்தேதி முதல் தஞ்சை மாவட்டத்தில், விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமையில் விதை ஆய்வாளர்கள் முனியய்யா, நவீன்சேவியர் மற்றும் பாலையன் ஆகியோர் அடங்கிய சிறப்பு விதை ஆய்வு குழு அமைக்கபட்டு ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மாரியம்மன் கோவில், தஞ்சை கொடிமரத்துமூலை உட்பட்ட இடங்களில் 24 தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதே போன்று இதர நாட்களில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தனியார் விதை விற்பனையாளர்கள் மற்றும் நிலக்கடலை வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில், விதைச்சட்ட விதிகளின் படி நிலக்கடலை விதை விற்பனை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டு அரசின் விதை உரிமங்கள் பெற்று, சான்று பெற்ற மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விசாயிகளுக்கு விற்பனை செய்திட எச்சரிக்கை வழங்கப்பட்டது.

நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட விலையில் நிலக்கடலை விற்பனை மேற்கொள்ளவும் கூடுதல் விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில், மாவட்ட தனியார் விதை விற்பனையாளர்கள் விதைச்சட்ட விதிகளின் படி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் குறித்து விதைச்சட்ட விதிகள் உள்ளடக்கிய பிரசுரம் அச்சடிக்கப்பட்டு ஆய்வின் போது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தொடர் நடவடிக்கையாக, ஒரத்தநாடு தாலுகாவில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் நேரடி ஆய்வில் விதை விற்பனையாளர்கள் கடை பிடிக்க வேண்டிய விதைச்சட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ரூ.10¼ லட்சம் விதை

ஒரத்தநாட்டை தொடர்ந்து, திருக்கானூர்பட்டி, மருங்குளம், பட்டுக்கோட்டை பகுதிகளில் 12 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையங்களில், 4 எண்ணிக்கையிலான நிலக்கடலை, நெல் மற்றும் உளுந்து விதை குவியல்களுக்கு விதைச்சட்டத்தின் கீழ் ரூ.10.28 லட்சம் மதிப்புள்ள 11.48 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.


Next Story