ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது


ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
x

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்தில் 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பத்தை புதுப்பிக்க கடைக்காரரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

2 பெண் குழந்தைகள் திட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு மது நிஷா (8), பிரதிக்சா (6) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் அரசின் 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன் பெற்று வருகிறார். இந்த திட்டத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்காக கடந்த 10-ந்தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றார். அங்கிருந்த சமூக நலத்துறை பிரிவு அலுவலர் பசும்பொன் தேவியை (56) அணுகி செந்தில்குமார் விண்ணப்பம் கொடுத்தார்.

அப்போது பசும்பொன்தேவி பல்வேறு சான்றிதழ்களை செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இறுதியாக, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் விண்ணப்பத்தை புதுப்பிக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்-லைன் மூலம் செந்தில்குமார் ரூ.1,500 செலுத்தினார். மீதி ரூ.1,500-ஐ ஓரிரு நாட்களில் தருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கையும், களவுமாக கைது

அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1,500-ஐ செந்தில்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். செந்தில்குமார் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றார். ஆனால் அங்கு பசும்பொன் தேவி இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, பல்லடம் பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்குமாறும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பல்லடம் பஸ் நிலையம் சென்று அங்கு நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1,500-ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பல்லடத்தில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story