சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர். மாடுகள் முட்டியதில் 36 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முன்னதாக சேலம் உதவி கலெக்டர் சங்கர் பவந்த்வாதே தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு களத்திற்கு அனுப்பப்பட்டனர். இதேபோல் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 501 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.
சீறிப்பாய்ந்த காளைகள்
பின்னர் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளுடன், காளையர்கள் மல்லுக்கட்டினர். சில காளைகள், காளையர்களை முட்டி தூக்கி அந்தரத்தில் பறக்க விட்டன. ஆனாலும் அடங்காத காளையர்கள், திமிலை பிடித்து காளைகளை அடக்கினர். அவர்களை பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க சங்கிலி, சைக்கிள், குக்கர், பேன், சில்வர் பாத்திரம், ரொக்கம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
15 காளைகளை அடக்கி...
ஜல்லிக்கட்டில் தன் காளையை அடக்கினால் 2 பவுன் சங்கிலி தருவதாக காளையின் உரிமையாளர் சவால் விட்டார். இதனால் களத்தில் வீரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியேறிய அந்த காளையை நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் அடக்கி, 2 பவுன் சங்கிலியை பரிசாக வென்றார். அவரை அனைவரும் பாராட்டினர்.
இதேபோல் அவர் 15-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கி, பல்வேறு பரிசுகளை வென்றார். காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 36 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி, பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
பாதுகாப்பு
ஜல்லிக்கட்டை வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வாழப்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.