பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் காயம்


பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் காயம்
x

வேலூரில் நேற்றிரவு தனியார் பஸ்சும், சுற்றுலா பஸ்சும் மோதிக் கொண்ட சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

வேலூர்

பஸ்கள் மோதல்

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து ஒடுகத்தூருக்கு நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் சுமார் 40 பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தை தாண்டி ஊசூர் நோக்கி சென்றது. அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு பெண் பக்தர்களுடன் சென்ற சுற்றுலா பஸ் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தனியார் பஸ் மற்றும் சுற்றுலா பஸ்சின் முன்பக்கம் சேதமானது.

மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் காயம்

இதில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனிடையே தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மற்றும் வேலூர் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இருபஸ்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். சில பயணிகளுக்கு ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story