பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்க - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்க - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x

பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் திட்டமிட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்தத் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சைமா அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பரங்கிப்பேட்டை சைமா சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடாக அமையும். ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டுமானால், அதற்காக பூமியிலிருந்து பல கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க வேண்டி இருக்கும். அதனால் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும்.

மற்றொருபுறம், முழுமையாக சுத்திகரிக்கப்படாத ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் தினமும் கடலில் கலக்கவிடப்பட்டால் மீன்வளம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கடல்நீர் உட்புகுந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும்; மீன்வளம் குறைவதால் ஏராளமான மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்.

கோவை மண்டலத்தில் உள்ள ஜவுளி ஆலைகளின் வளர்ச்சி முக்கியம் தான். ஆனால், அதற்கான கட்டமைப்புகள் அந்த மண்டலத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு எதிரான சாயக்கழிவு ஆலை அமைக்க முயல்வது நியாயம் அல்ல. இந்த முயற்சியை அரசு ஆதரிக்கக்கூடாது. கோவை மண்டல சாயப்பட்டறை முதலாளிகள் வளமாக வாழ்வதற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வயிற்றில் அடிப்பதை பாமக எக்காலத்திலும் அனுமதிக்காது.

ஒருபுறம் என்எல்சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் கடலூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதி ஆலைகள் அவற்றின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் சாயக்கழிவு ஆலை கடல்வளத்தையும், நிலத்தடி நீர்வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு அரசே துணை போகக்கூடாது.

எனவே, பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான சைமா அமைப்பின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எந்த வகையிலும் ஆதரவளிக்கக் கூடாது. மாறாக, சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story