விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் ரோடு இந்திரா நகரில் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள், வீடுகளை அகற்றுவதற்காக விருத்தாசலம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர்.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வீடுகளின் சுற்றுச்சுவர், ஒரு வீடு மற்றும் ஆலடி சாலையில் உள்ள பாழடைந்த தகர கொட்டகை வீடு, ஒரு காலி மனையில் இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் தொடங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் பொதுமக்கள் பேரணியாக சென்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு

இந்நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி முன்னிலையில் தொடங்கியது. இதையொட்டி விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் மற்றும் வீடுகளின் முன்பகுதிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது கடையின் உரிமையாளர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து, கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

சாலை மறியல்

தொடர்ந்து கடலூர் சாலையில் இருந்து இந்திரா நகர் உள்ளே சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலும் செய்தனர். இதையடுத்து இந்திரா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கைவிடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து மீண்டும் கடலூர் சாலையில் மற்றொரு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளின் முன்புறம் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டது.

இன்றும் தொடரும்

ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், நோட்டீஸ் வினியோகித்தும் கடைகளில் இருந்த பொருட்களை அதன் உரிமையாளர்கள் எடுக்கவில்லை. இதனால் கடைகளின் முன்புறம் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்படும் என தாசில்தார் தனபதி தெரிவித்தார்.


Next Story