ஏரிகளில் இருந்து களிமண்ணை எடுத்துக் கொள்ளலாம்; கலெக்டர் அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான களிமண்ணை ஏரிகளில் இருந்து நிபந்தனைகளுடன் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான களிமண்ணை ஏரிகளில் இருந்து நிபந்தனைகளுடன் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்துவரும் 184 மண்பாண்ட தொழிலாளர்கள் மழைக் காலத்திற்கு முன்பாக தங்கள் தொழிலுக்குத் தேவைப்படும் களிமண்ணை கோடைகாலத்திலேயே ஏரிகளில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 184 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிபந்தனைகளுடன் களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அனுமதி அளித்துள்ளார். மேலும் அது குறித்த நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ஆவணங்களை காண்பிக்க வேண்டும்
ஏரிக்கரையின் முன்பக்க சரிவில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மண் எடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மதகின் அடித்தள மட்டத்திற்கு கீழ் எடுக்கக்கூடாது. ஏரியில் நீர் இருப்பு இல்லாத போது மட்டுமே மண் எடுக்க வேண்டும். ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் மற்றும் உபரி நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே மண் எடுக்கும் வாகனங்கள் செல்லக்கூடாது.
ஏரியில் மண் எடுக்கும் பணி தொடங்கும் முன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை பிரிவு அலுவலரை சந்தித்து அவர்கள் குறிப்பிடும் இடங்களில் குறிப்பிட்ட அளவுகளின்படி மட்டுமே மண் எடுக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வின் போது உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். இரவு நேரங்களில் மண் எடுக்க அனுமதி கிடையாது. ஏரியில் இருந்து எடுக்கும் மண் மண்பாண்டம், செருகு ஓடு, பில்லை ஓடு செய்யும் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் செங்கல் சூளைக்கு அல்லது விற்பனை ரீதியாக பயன்படுத்தக் கூடாது.
இந்த நிபந்தனைகளுடன் ஆற்காடு, திமிரி, சோளிங்கர், நெமிலி, வாலாஜா, காவேரிப்பாக்கம் மற்றும் அரக்கோணம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மண் எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.