கஜா புயல்-கொரோனா தாக்கத்துக்குப்பின் மெல்ல, மெல்ல புத்துயிர் பெறும் கயிறு தொழிற்சாலைகள்


கஜா புயல்-கொரோனா தாக்கத்துக்குப்பின் மெல்ல, மெல்ல புத்துயிர் பெறும் கயிறு தொழிற்சாலைகள்
x

சேதுபாவாசத்திரம் பகுதியில் தேங்காய் மட்டைகள் தாராளமாக கிடைத்து வரும் நிலையில், கஜா புயல், கொரோனா தாக்கத்துக்குப்பின் கயிறு தொழிற்சாலைகள் மெல்ல, மெல்ல புத்துயிர் பெறுகிறது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் தேங்காய் மட்டைகள் தாராளமாக கிடைத்து வரும் நிலையில், கஜா புயல், கொரோனா தாக்கத்துக்குப்பின் கயிறு தொழிற்சாலைகள் மெல்ல, மெல்ல புத்துயிர் பெறுகிறது.

தென்னை வளம்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை, கரும்பு, வாழை போன்ற பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் தஞ்சை மாவட்டத்தை கடுமையாக தாக்கியது. அதற்கு முன்பு வரை தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவு தேங்காய் உற்பத்தி இருந்தது. மாவட்டத்தின் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்கள் தென்னை வளம் மிகுந்த பகுதிகளாகும்.

புயல் தாக்கம்

சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் எக்டேர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் மட்டுமின்றி தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு அதிகமாக செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கு 200-க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

செருவாவிடுதி, குறவன்கொல்லை, ராஜாமடம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் அரசு மூலமாகவும், மற்றவை தனியார் மூலமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. 80 சதவீதம் தொழிற்சாலைகள் கஜா புயலில் தரைமட்டமானது. இதற்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை.

கயிறு தொழிற்சாலைகள்

புயல் மற்றும் கொரோனா தாக்கத்திற்கு பின் கயிறு தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல இயங்க தொடங்கிய நிலையில், திடீரென தேங்காய் விலையில் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதியை குறைத்து வியாபாரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் தேங்காய் உரிப்பதும் குறைந்து விட்டது. தேங்காய் மட்டைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் இரவு பகலாக இயங்கி வந்த கயிறு தொழிற்சாலைகள் ஒரு நாள் விட்டு ஒருநாள் இயங்கின. ஒருசில தொழிற்சாலைகள் மூடிக்கிடந்தன.

மீண்டும் புத்துயிர் பெற்ற தொழிற்சாலைகள்

இதனால் தொழிற்சாலைகளில் வேலை பார்த்துவந்த நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து தடுமாறி வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக தேங்காய் விலை 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து விலை ஒரே சீராக உள்ள நிலையில் வியாபாரிகள் வேறு வழியின்றி தற்போது மீண்டும் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக தேங்காய் உரிப்பது அதிகரித்து, தேங்காய் மட்டை தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. தேங்காய் விலை சரிவு தேங்காய் மட்டையின் விலையும் குறைந்து விட்டது. இந்த சூழலை பயன்படுத்தி கயிறு தொழிற்சாலைகளும் மெல்ல, மெல்ல புத்துயிர் பெற்று இயங்கி வருகின்றன. இதனால் கயிறு தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Next Story