நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் இருந்து 33 டன் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு


நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் இருந்து 33 டன் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு
x

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 33 டன் காலி மதுபாட்டில்கள் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 33 டன் காலி மதுபாட்டில்கள் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலி மதுபாட்டில்கள்

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பல மதுக்கடைகள், கிராமப்புறங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிகளையொட்டி அமைந்து உள்ளன. இதனால் மதுபான கடைகளில் மது பாட்டில்களை வாங்கி மது குடித்து விட்டு காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் வனப்பகுதி, மற்றும் நீர்நிலைகளில் வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உடைந்த காலி மதுபாட்டில்களால் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 15-ந் தேதி முதல் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கொடுத்து, அந்த காலி மதுபாட்டில்கள் மீண்டும் டாஸ்மாக் கடைகளால் வாங்கப்படுகிறது.

33 டன் சேகரிப்பு

இந்த நிலையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வனப்பகுதியில் வீசப்பட்ட மதுபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி கடந்த மாதம் வனப்பகுதி, நீர்நிலையோரம், சுற்றுலா பகுதிகள் மற்றும் சாலையோரம் கிடந்த 33 டன் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மண்டல டாஸ்மாக் மேலாளர் கோவிந்தராஜுலு கூறியதாவது:-

தற்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கொடுத்து அந்த பாட்டில்களை மீண்டும் கடைகளில் கொடுக்கும் நடைமுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 80 சதவீத பாட்டில்கள் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திரும்பி விடுகின்றன. ஒருசிலர் காலி மதுபாட்டில்களை சாலையில் வீசிவிட்டு சென்றால்கூட, டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதால், அதைப் பார்க்கும் வேறு சிலர் காலி மது பாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடைகளில் கொடுத்து விடுகின்றனர்.

11 குழுக்கள் அமைப்பு

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில் வீசப்பட்ட மது பாட்டில்களை சேகரிக்க தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன், 11 குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த மாதத்தில் மட்டும் 33 டன் மது காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே வீசப்பட்டு உள்ள மதுபாட்டில்களை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை வனப்பகுதி மற்றும் சாலையோரம் வீசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story