ராஜாவாய்க்கால் 'ரீமாடலிங்' பணிக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
ராஜாவாய்க்கால் ‘ரீமாடலிங்’ பணிக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
ராஜாவாய்க்கால் 'ரீமாடலிங்' பணிக்கு தேவைப்படும் முழுமையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீட்டர் ஆகும். தற்போது வரை 263.95 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 77 மி.மீட்டர் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் மே மாதம் வரை சிறுதானியங்கள் 3,280 ஹெக்டேர் பரப்பளவிலும், பயறு வகைகள் 1,479 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 3,260 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 1,100 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 374 ஹெக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 9,493 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
சர்க்கரை ஆலை
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அவை வருமாறு:-
நல்லாகவுண்டர்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு அரவை பருவத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பை விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 1 லட்சத்து 45 ஆயிரம் டன் மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்புக்கும் இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாக பணம் வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளுக்கு முழுமையான பணம் உடனடியாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்: அரவை செய்யப்பட்ட கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை விற்பனை செய்து தான் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியும். சர்க்கரை இன்னும் முழுமையாக விற்பனையாகாததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ராஜாவாய்க்கால் 'ரீமாடலிங்' பணி
பெரியசாமி: ராஜாவாய்க்கால் 'ரீமாடலிங்' பணி சுமார் 25 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. அடுத்த வாரம் நாமக்கல்லுக்கு வரும் முதல்-அமைச்சரிடம் மீதமுள்ள பணிக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்க வேண்டும். இதேபோல் பரமத்திவேலூரில் இயங்கி வந்த வெற்றிலை ஆராய்ச்சி மையம் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. மீண்டும் அதை இங்கு அமைத்திட ஆவன செய்ய வேண்டும்.
ராஜாவாய்க்காலில் நீர் தாவரம் படர்ந்து இருப்பதால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது இல்லை. எனவே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருத்தியில் நோய் தாக்குதல்
சுந்தரம்: நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயம் அதிகபடியாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இதேபோல் பருத்தியும் கனிசமான அளவுக்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பருத்தி செடியில் செம்பேன் தாக்குதல் காணப்படுவதால், செடி பழுப்பு நிறமாக மாறி வருகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் பருத்தி காயின் அளவும் சிறியதாக உள்ளது. அதற்கும் உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.
கடந்த வாரம் வரை கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பருத்தி தற்போது ரூ.90, ரூ.100 என திடீரென குறைந்துள்ளது. இந்த விலை சரிவு செயற்கையானது போல தெரிகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிசல் போக்குவரத்து
தங்கமணி: ஜேடர்பாளையம் பகுதியில் அதிகளவில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவே அங்கு கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். வடகரையாத்தூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ள பரிசல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நடராசன், நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார், வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் நாசர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.