'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கண்காணிப்பு கேமராக்கள் பழுது

வடமதுரை நகரின் முக்கிய பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இந்தநிலையில் வடமதுரையில் வேடசந்தூர் சாலை, திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளன. இதனால் தப்பிச்செல்லும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், விபத்து குறித்து விசாரணை நடத்த முடியாமலும் போலீசார் சிரமம் அடைகின்றனர். எனவே வடமதுரையில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமித்ராஜா, வடமதுரை.

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

சித்தையன்கோட்டை பேரூராட்சி 1-வது வார்டு நரசிங்கபுரத்தில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ராஜன், சித்தையன்கோட்டை.

அடிப்படை வசதிகள் வேண்டும்

சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டில் சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரமணி, சீலப்பாடி.

போக்குவரத்துக்கு இடையூறு

திண்டுக்கல் நாகல்நகர் மேட்டுப்பட்டி நேதாஜிநகரில் சாலையோரத்தில் கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜ், திண்டுக்கல்.

சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்

நிலக்கோட்டை நால்ரோடு அருகே செயல்படும் அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மையத்துக்கு குழந்தைகளை அனுப்பவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

சாக்கடை கால்வாயால் அவதி

கோபால்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் குறுக்காக புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் சாலையில் இருந்து சற்று உயரமாக திண்டு போல் கட்டப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாய் அமைந்துள்ள இடத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைப்பு பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

-பொதுமக்கள், கோபால்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டி ஆசாரிதெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், கல்லுப்பட்டி.

வாய்க்காலில் கலந்த கழிவுநீர்

சின்னமனூரில் காந்திசிலை அருகில் உள்ள சின்னவாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே கழிவுநீர் வாய்க்காலில் கலக்காமல் தடுக்க வேண்டும்.

-தெய்வேந்திரன், சின்னமனூர்.

மலைப்பாதை குவிலென்சு சேதம்

சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் வைக்கப்பட்ட குவிலென்சு சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குவிலென்சை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், மகாராஜாமெட்டு

சாலையில் தேங்கும் கழிவுநீர்

தேனியை அடுத்த மொட்டனூத்து ஊராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரபத்திரன், மொட்டனூத்து.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

உத்தமபாளையம் பேரூராட்சி கோட்டைமேடு பகுதியில் இருந்து பெருமாள் கோவில் செல்லும் சாலையோரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காதர் மீரான், உத்தமபாளையம்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------


Next Story