'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை டவுன் பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவில் கழிவுநீர் வாறுகால் சுத்தம் செய்வதில்லை. இதனால் காம்பவுண்டு பகுதிக்குள் கழிவுநீர் வந்து நடைபாதையில் தேங்கி கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும் என்று நெல்ைல டவுனைச் சேர்ந்த சோலையப்பன் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

சிக்னல் கம்பம் அமைக்கப்படுமா?

மூலைக்கரைப்பட்டியில் இருந்து நெல்லை செல்லும் சாலையானது அதிகமான போக்குவரத்து உள்ள பகுதியாகும். இங்குள்ள வடக்கு பகுதியில் எல்.ஐ.சி. பாலத்தில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த பாலத்தின் இருபகுதிகளிலும் சூரிய மின்சிக்னல் கம்பம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மணிகண்டன், கடம்பன்குளம்.

உடைந்து கிடக்கும் பயணிகள் இருக்கை

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பிலான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த இருக்கைகள் தற்போது பழுதடைந்து உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, உடைந்து கிடக்கும் பயணிகள் இருக்கைகளை சரிசெய்ய வேண்டுகிறேன்.

முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

களக்காடு அருகே உள்ள டோனாவூர்-ஏர்வாடி செல்லும் சாலையானது பல்வேறு பணிகளுக்கான தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. தற்போது அந்த சாலை மிகவும் மோசமாக இருப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.

ஜோஸ்வா, டோனாவூர்.

சேறும், சகதியுமான சாலை

வள்ளியூர் தினசரி சந்தையில் உள்புறம் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

துரைபாண்டி, வள்ளியூர்.

ஆபத்தான நன்மைக்கூடம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் தெற்கு கழுநீர்குளத்தில் நன்மைக்கூடம் ஒன்று உள்ளது. இது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக நன்மைக்கூடம் அமைக்க வேண்டும்.

மனோ, பாவூர்சத்திரம்.

சாலை சீரமைக்கப்படுமா?

கடையம் அருகே ரவணசமுத்திரம் விலக்கில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, இந்த சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.

பயன்பாடு இல்லாத தொலைபேசி கம்பம்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 3-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த தெருவில் பயன்பாடு இல்லாத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இரும்பு கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. இதன் அருகில் தினமும் குழந்தைகள் விளையாடுகிறார்கள். தற்போது பலத்த காற்று வீசி வருவதால் இந்த இரும்பு கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கம்பத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

அடிப்படை வசதி வேண்டும்

கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்து சமத்துவபுரத்தில் அடிப்படை வசதி இல்லாததால் ெபாதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ரேஷன் கடை இருந்தும் திறக்கப்படவில்லை. எனவே, இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, ரேஷன் கடை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பால்ராஜ், அருணாசலபுரம்.

சாலையின் நடுவே மின்கம்பங்கள்

செங்கோட்டை காமராஜர் காலனியில் சாலையின் நடுவே அடுத்தடுத்து 2 மின்கம்பங்கள் உள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

நாணய கணேசன், செங்கோட்டை.




Next Story