குன்னத்தூர்மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகாமாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில்களின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கிராம சாந்தி பூஜையும், 30-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், இரவு மகா மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை நான்காம் காலை யாக பூஜையும், யாத்ரா தானமும், புனித தீர்த்த கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து காலை விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அக்ரஹாரம் குன்னத்தூர் மாரியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள்செய்திருந்தனர்.