விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம்


விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
x

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 6-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இதை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜ.க. மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, விநாயகர் ஊர்வல கமிட்டியை சேர்ந்த குமரவேல், ராஜேந்திரன், தோலி செல்வம், மாரிமுத்து, கபில் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

24 மணிநேரமும் பாதுகாப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது தரை மட்டத்தில் இருந்து சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தது 10 பேர் கொண்ட கமிட்டியினரை நியமித்து 24 மணிநேரமும் சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைவைக்கும் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைக்கு அமைக்கப்படும் மேற்கூறையானது தகரம் அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் இவைகளால் அமைக்கப்பட வேண்டும்.

தொழுகை நேரத்தில் அனுமதி கிடையாது

மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று தான் புதிய விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும். ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்கோ அல்லது பொது அமைதிக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள கூடாது.

விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் குளத்தில் கரைத்தல் ஆகியவைகளை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் இஸ்லாமியரின் தொழுகை நேரத்தின் போது மசூதிகளை கடந்து செல்ல அனுமதி கிடையாது.

களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

ரசாயன பொருட்களால் தயாரித்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவோ, ஆற்றில் கரைக்கவோ கூடாது. ஊர்வலத்தில் வருபவர்கள் மாற்று மதத்தினரை புண்படுத்தும் வண்ணம் கோஷங்கள் எழுப்பக்கூடாது.

ஊர்வலத்தின்போது வெடிகளை வெடிக்க கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story