நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிரஷர் உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிரஷர் உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிரஷர் உரிமையாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிரஷர் உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளை தற்காலிகமாக மூடவும், அவற்றை ஆய்வு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனால் கல்குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்கள் போன்றவற்றை எடுக்க முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும், எனவே மீண்டும் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், கிரஷர்களில் ஏற்கனவே தயாராக உள்ள எம்.சாண்ட், ஜல்லி கற்கள், குண்டு கற்கள் போன்றவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தியும், நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் சீட்டு அடிப்போர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நெல்லை, தென்காசி மாவட்ட சேம்பர் பிரிக்ஸ் நாட்டு செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ரமேஷ், ரிச்சர்ட், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோர்ட்டு உத்தரவு

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ''நெல்லை மாவட்டத்தில் 42 கிரஷர்களும் தென்காசி மாவட்டத்தில் 47 கிரஷர்களும் உள்ளன. இங்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட எம்.சாண்ட், ஜல்லி கற்கள், குண்டு கற்களை எடுத்து செல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் 10 நாட்களுக்கு மேலாகியும் அனுமதி வழங்க மறுக்கிறார்கள். எனவே உடனே அனுமதி வழங்க வேண்டும்'' என்றனர்.


Next Story