'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஊராட்சி 2-வது வார்டில் பள்ளிக்கூடம் உள்ள பகுதிகளில் பெரும்பாலான மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து இருப்பதாக, குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த இயேசுவடியான் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக பள்ளிக்கூடம் அருகில் உள்ள மின்கம்பங்கள் நேற்று மாற்றப்பட்டன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

மின்விசிறி வசதி தேவை

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை பதிவு மையம் உள்ளது. பயனாளிகள் காத்திருக்கும் அறையில் மின்விசிறி இல்லை. இதனால் அங்கு வருகை தரும் நோயாளிகள், முதியோர்கள் வெயில் நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே குறிப்பிட்ட அறையில் மின்விசிறி வசதி ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சேதமடைந்த பெயர் பலகைகள்

நெல்லை மாவட்டம் முக்கூடலில் கீழ பெரியவீதி, மேல பெரிய வீதி, காமராஜர் தெரு, அழகப்பர் தெரு உள்ளிட்ட பல இடங்களில் பெயர் பலகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் போதிய பராமரிப்பின்றி உள்ளது. பெயர் பலகையில் அரசியல் கட்சி விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் பெயர் பலகைகளில் பெயர் இல்லாமலும் வெறுமனே காட்சி அளிக்கிறது. சுப்பையா தெரு உள்ளிட்ட சில இடங்களில் பெயர் பலகைகள் சாய்ந்தும் கிடக்கின்றன. பல இடங்களில் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டு விட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் தெரு பெயர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பெயர் பலகைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆதிமூலம், முக்கூடல்.

நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

தேவர்குளத்தில் தெற்கு, வடக்கு என 2 பஸ்நிறுத்தங்கள் உள்ளன. இதில் வடக்கு பஸ்நிறுத்தத்தில் நின்று செல்ல அரசு ஆணை இருந்தும் பெரும்பாலான அரசு பஸ்கள் அங்கு நிற்பதில்லை. குறிப்பாக புளியங்குடி பணிமனையை சேர்ந்த பஸ்கள் நிற்பதே கிடையாது. இதனால் வயதானவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுமார் 1½ கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே வடக்கு பஸ்நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

லாரன்ஸ், தேவர்குளம்.

வடிகால் வசதி செய்யப்படுமா?

மானூர் தாலுகா மேல இலந்தைகுளம் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக் காலத்தில் சாலையில் தேங்கும் மழைநீர், வீட்டுக்குள் புகுந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வீட்டில் அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விடுகின்றன. எனவே மழைக் காலம் வருவதற்கு முன்னதாக வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

யோசேப்பு, மேல இலந்தைகுளம்.

எச்சரிக்கை பலகை வேண்டும்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூரில் இருந்து சிவசைலம் செல்லும் ரோட்டில் பங்களா குடியிருப்பு அருகே அபாயகரமான வளைவு உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், வளைவின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும் அங்கு வேகத்தடையும் அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

பள்ளம் மூடப்படுமா?

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பீச் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நடக்கிறது. எனவே பள்ளத்தை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கருணாமூர்த்தி, தூத்துக்குடி.

பேவர் பிளாக் சாலை

கோவில்பட்டி பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பல இடங்களில் பணிகள் முடியும் தருவாயில், காங்கிரீட் கலவை பூசப்படாமல் மண்ணை போட்டு செல்கின்றனர். இதனால் மழை காலத்தில் அரிப்பு ஏற்பட்டு படிக்கட்டுகளில் ஏறி சாலையை கடப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமப்படுவதால் பேவர் பிளாக் சாலையை முறையாக, தரமாக அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story